தமிழகம்

தமிழக மின் வாரியம் 2021-ம் ஆண்டு லாபத்தில் இயங்கும்: அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

அடுத்த 4 ஆண்டுகளில் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தமிழக மின் வாரியம் லாபத்தில் இயங்கும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சி யில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. திமுக ஆட்சியில் 2008 ஏப்ரலில் மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அன்றைய மின் துறை அமைச்சர், தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றார்.

ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சி முடியும் வரை 40 முதல் 90 சதவீதம் வரை மின்வெட்டு நடை முறையில் இருந்தது. தமிழகமே இருளில் மூழ்கியது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் 8,432 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தின் மின் தேவை முழுவதையும் பூர்த்தி செய்துள்ளோம்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய மின் உற்பத்தி நிலையங்கள், மின் உற்பத்தி நிலைய விரிவாக்கப் பணிகள், சூரிய மின்சக்தி ஆகியவற்றின் மூலம் 18,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் 2021-க்குள் நிறைவடையும்.

தற்போது 14 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் இது 20 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். அப்போது இதைவிட அதிகமாக மின் உற்பத்தி இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங் களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல மின்வழித் தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அரசே வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 3) காற்றாலை மூலம் உற்பத்தியான 4,505 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தியில் சிறந்த செயல்பாடு களுக்காக மத்திய அரசின் 10 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. மின்வாரியத்தின் கடன்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அதாவது 2021-க்குள் தமிழக மின் வாரியம் லாபத்தில் இயங்கும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT