திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானலில் வெயில் மற்றும் கடும் குளிர் என மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
கொடைக்கானலுக்கு சீசன் காலங்கள் மட்டுமின்றி ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். சீசன் இல்லாத மாதங்களில் வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமான அளவு அதிகரிக்கும். இந்நிலையில் கொடைக்கானலில் பகலில் வெயில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் குளுமையான சீதோஷ்ண நிலையை பகலில் அனுபவிக்க முடிவதில்லை.
ஆனால் இரவில் கடும் குளிர் காணப்படுகிறது. அங்கு வசிக்கும் மக்களைப்போல் சுற்றுலாப் பயணிகளால் குளிரை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் தங்கிச்செல்ல முடியாத தட்பவெப்பநிலை நிலவுகிறது. பகலில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளது. இது படிப்படியாக குறைந்து இரவு 10 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது.
இரவில் காற்றில் ஈரப்பதம் 60 சதவீதம் உள்ளது. மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் மாலை நேரத்தில் மிதமான காற்று வீசுகிறது. பகலில் வெப்பக் காற்றாகவும், இரவில் குளிர் காற்றாகவும் மாறுகிறது. இந்த மாறுபட்ட சீதோஷ்ணநிலையை சுற்றுலாப் பயணிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்ற ஆண்டு காதலர் தினத்துக்கு கொடைக்கானலில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்த ஆண்டு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் காண முடிவதில்லை.