பெண்கள் சாலைகளில்கூட பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். ஆபாசமான விமர்சனங்கள், அநாகரிகமான தொடுதல் என சீண்டலுக்கு ஆளாகின்றனர்.
ஆனால் இது பற்றி அவர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. வெகு சிலரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன் சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நடந்தது. டி.ஜோத்ஸனா, இவர் கிண்டி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். சாலையோர நடைமேடையில் நடந்து சென்ற இவரை காரில் வந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அவர் கிண்டி ரயில் நிலையம் அடையும் வரை பின் தொடர்ந்த அந்த நபர் மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். ஆனால், ஜோயிட்ஸ்னா அவரை கண்டு கொள்ளவில்லை. மாறாக மவுனியாக வேகமாக ரயில் நிலையத்தை அடைந்தார்.
அந்த சம்பவத்திற்குப் பின்னர், சிறிய தூரம் நடப்பதைக்கூட ஜோத்ஸனா தவிர்த்துவிடுகிறார். பெரும்பாலும், ஆட்டோ பயணங்களையே மேற்கொள்கிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் நாகசீலா கூறும்போது, "சாலைகளிலோ அல்லது பேருந்துகளிலோ பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அங்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தல் நல்லது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், பெண்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வதற்குக்கூட அவர்கள் விரும்புவதில்லை" என்றார்.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக வெகு சில வழக்குகளே பதிவாகின்றன. பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. இருந்தும் தயக்கம் நீடித்தால், ஃபேஸ்புக், இ-மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தொடராமல் காக்க முடியும்" என்றார்.
மொபைல் மூலம் புகார் தெரிவிக்க:98409 83832
எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்க:95000 99100
இ மெயில்:cop@vsnl.net