தமிழகம்

தேவயானி விவகார அக்கறையை இசைப்பிரியாவுக்கு காட்டாதது ஏன்? - மத்திய அரசுக்கு கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி விவகா ரத்தில் காட்டிய அக்கறையை, இசைப்பிரியா, பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காட்டாது ஏன் என, மத்திய அரசுக்கு கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்டது பற்றி ஒரு இந்தியப் பெண்ணுக்காக அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும், இலங்கையில் படுகொலை செய்யப் பட்ட இசைப்பிரியாவுக்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப் பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூற வில்லை. அதே நேரத்தில், இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு குற்றப் பத்திரிகையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழு தலைவர் அன் றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் வழக்கறிஞர் வாகன்வதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெற வில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராஜா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறிஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மைதான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்தபோது, அதனை அவர் மறந்துவிட்டதாகவும், நீதிமன்றத்தில் ராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை, உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT