தமிழகம்

அமித்ஷாவை சந்தித்து பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவை உறுதிப்படுத்திய புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள்

செய்திப்பிரிவு

பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும், அதிமுக சட்டப்பேரவைக்குழுத்தலைவர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்களும் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரின் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

புதுச்சேரிக்கு இரு நாள் பயணமாக பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா வந்துள்ளார். அவரை புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமையில் எம்பி ராதாகிருஷ்ணன், அக்கட்சி எம்எல்ஏக்களில் ஜெயபால், அசோக் ஆனந்த், சுகுமார், கோபிகா ஆகியோர் சந்தித்தனர். மொத்தமுள்ள 8 எம்எல்ஏக்களில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் செல்வம் உட்பட 3 எம்எல்ஏக்கள் அவருடன் செல்லவில்லை.

அதேபோல் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் எம்பி கோகுலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சந்தித்தனர். அதிமுக எம்எல்ஏக்களில் காரைக்காலைச் சேர்ந்த அசனா மட்டும் பங்கேற்கவில்லை. அதைத்தொடர்ந்து அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர்.

சந்திப்புக்கு பிறகு எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி கூறுகையில், "ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை என்.ஆர்.காங்கிரஸ் ஆதரிக்கும் என்று தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் புதுச்சேரி வந்துள்ள பாஜக தேசியத்தலைவரை சந்தித்து எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பியின் ஆதரவை தெரிவித்தோம்" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சி தொடர்பாகவும், இதர கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறுகையில், அதிமுக துணை பொதுச்செயலர் தினகரன் ஆணைப்படி பாஜக வேட்பாளருக்கு புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை அமித்ஷாவிடம் தெரிவித்து உறுதிப்படுத்தினோம். கடந்த ஓராண்டாக புதுச்சேரியில் செயல்படாத காங்கிரஸ் ஆட்சி குறித்தும் தெரிவித்தோம்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT