மத்திய பாஜக அரசு உத்தரப் பிரதேசத்தில் இலவசமாக ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிவாயு சிலிண்டர் மற்றும் உபகரணங்களை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாஜக ஆட்சிக்கு வந்ததும், இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தில் மானியத்தைக் குறைப்பதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படையில் 3 கோடி போலி இணைப்புள்ள, 3 கோடி பயனாளிகளை நீக்கினார்கள். அதன்பின் சிலிண்டர் மானியச் சலுகைகளை பயன்படுத்தாமல் ஒரு கோடிப் பேர் தாங்களாகவே மானியத்தைத் துறப்பதற்காக வழி வகுத்தார்கள். அதற்கு பிறகு ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் பெறுவோருக்கு சிலிண்டர் மானியம் வழங்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கெனவே அமலில் உள்ள சலுகைகளை ஒவ்வொன்றாக குறைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அதே சமயம் உத்தர பிரதேசத்தில் அங்குள்ள ஏழைப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் சிலிண்டர் இணைப்பு, 2 சிலிண்டர்கள், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, மத்திய அரசு - உத்தரப் பிரதேசத்தில் அடுத்து வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு இச்சலுகைகளை அரசியல் கண்ணோட்டத்தோடு வழங்கியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இத்திட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஒடிசா, பீகார், கோவா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. அப்படியென்றால் தமிழ் நாட்டிலும் அத்திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமல்லவா. அப்பொழுது தான் தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்கள் இலவசமாக எரிவாயு சிலிண்டர் மற்றும் உபகரணங்களை பெற வழி வகுக்கும்.
எனவே, மத்திய அரசு இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது மக்கள் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் பெற்று பயன்பெறும் திட்டத்தினை முடக்கும் செயல்களில் மத்திய அரசு ஒருபோதும் ஈடுபட கூடாது.
எனவே, மத்திய பாஜக அரசு எரிவாயு சிலிண்டர் மானியத்தையும், சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.