முறைகேடாக ரூ.90 லட்சம் வங்கிக் கடன் பெற்றதாக முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் மகன் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் டிஜிபி ஸ்ரீபாலின் மகன் ஸ்ரேயஸ். இவர் தனக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊழியர்கள் என 45 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, நுங்கம்பாக்கம் கனரா வங்கிக் கிளையில் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ கடந்த 2006-ல் இவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரேயஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், 2009-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் வங்கி அதிகாரிகள் அம்மையப்பன், சீனிவாசன் உட்பட 4 பேர் மட்டும் சேர்க்கப்பட்டு ஸ்ரேயஸ் உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணை முறையாக நடக்காததால் தங்களை விடுவிக்குமாறு கோரி வங்கி அதிகாரிகள் 2 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, ‘‘இந்த மோசடி வழக்கில் புலன்விசாரணை அதிகாரி முறையாக, முழுமையாக விசாரணை நடத்தவில்லை. முக்கிய குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், எந்த காரணமுமின்றி வழக்கில் இருந்து நீக்கியுள்ளார். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ தனது இறுதி அறிக்கையை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.