தமிழகம்

குடிநீரை சட்ட விரோதமாக விற்கும் லாரிகள்: ஆர்.கே.நகரிலும் நடக்கும் அவலம் - வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய லாரி தண்ணீரை சில ஒப்பந்ததாரர்கள் தனிப்பட்ட வீடுகளுக்கு விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியின் கொருக்குப்பேட்டையில் இவ்வாறு நடந்திருப்பதற்கு அப்பகுதியினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் விநியோகத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

குடிநீர் விநியோகிக்க சென்னை குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளவர்கள், தங்கள் லாரிகளில் எடுத்துச் செல்லும் குடிநீரை வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் மட்டுமே நிரப்ப வேண்டும். ஆனால், சில லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் இந்த தண்ணீரை தனியாருக்கு விற்பதாகவும், வீடுகள் முன்பு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நிரப்புவதாக வும் பரவலாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு சட்ட விரோதமாக செயல்படும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் மீது குடிநீர் வாரியம் சார்பில் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை அனந்தநாயகி நகர் 3-வது தெருவில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரிய லாரி பிரத்யேகமாக குடிநீர் விநியோகித்துள்ளது. தவிர, வீட்டுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகள், வீட்டு மொட்டை மாடிகளிலும்கூட குழாய் மூலமாக குடிநீர் நிரப்பியுள்ளனர்.

இதுகுறித்து தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியபோது, ‘‘சென்னையில் இதுபோன்ற சட்ட விரோத செயல் பரவலாக நடக்கிறது. ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இவ்வாறு தனியாருக்கு குடிநீரை விற்பதால் ஏழை மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள லாரிகள், வாரியம் வைத்துள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளில் மட்டுமே தண்ணீர் நிரப்ப வேண்டும். குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்திடம் தகவல் தெரிவித்து, அந்த தொட்டிகளுக்காக தனியே எண் வாங்க வேண்டும். அவ்வாறு குடிநீர் வாரிய எண் பெறப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப அனுமதி உண்டு. மற்ற வழிகளில் தண்ணீர் விநியோகித்தால் சம்பந்தப்பட்ட லாரி ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT