“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பர். ஆனால் எதற்கு, எப்படி வந்தது எனத் தெரியாமல், அடுத்து என்ன சிகிச்சை, தக்க மருந்து கிடைக்காமல் வாழ்க்கையை இழந்து படுத்த படுக்கையாய் கண்ணீர் வடிப்பவர்கள் தசை சிதைவு நோயாளிகள் (மஸ் குலர் டிஸ்ட்ரோபி).
எல்லா மனிதர்களுக்கும் உடலில் இருக்கும் செல்கள் அழிந்து, புதிய செல்கள் உரு வாகும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. உடம்பின் தசைகள் மெல்ல தனது செயல்பாட்டை இழக் கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் சரியாகப் பேசவராது. இந்த நோயாளிகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் மற்றவர்கள் துணையின்றி இவர்களால் கடந்து செல்ல இயலாது. தசை சிதைவு நோய்க்கு சரியான மருந்து இன்னமும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது.
வீட்டிலேயே முடக்கம்
உலகில் பிறக்கும் 3,000 குழந்தை களில் ஒன்று இந்தக் கொடூர நோயால் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு குழந்தையாக இருக்கும்போதே இந்நோய் ஏற்படுகிறது. சிலருக்கு நடுத்தர வயதில் இந்த நோய் திடீ ரென ஏற்படுகிறது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி இளைஞர் எம்.சரவணக்குமாருக்கு (38) இந்த நோய் 15 வயதில் வந்துள்ளது. தற்போது வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார். வேலைகளுக்குச் செல்ல முடியவில்லை. அதனால், மண வாழ்க் கையையும், எதிர்காலத்தையும் இழந்து, வயதான பெற்றோரைக் காப் பாற்ற வேண்டிய வயதில் அவர்களை நம்பி காலத்தை கழிக்கிறார். இதுபோன்ற நிலை மற்றவர் களுக்கு வரக்கூடாது என்பதற்காக இவரது சித்த மருத்துவ நண்பர்கள் பிரகாஷ், ஜேம்ஸ், வள்ளலார் ஆகி யோர் சேர்ந்து தசை சிதைவு நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். இந்த ஆய்வில் ஒவ்வொரு படிநிலை மருந்தை யும் செலுத்தும் பரிசோதனை உயிரியாகச் செயல்பட தனது உடலையே சரவணக்குமார் ஒப்படைத்துள்ளார்.
சித்த மருத்துவ ஆராய்ச்சி
இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, தசை சிதைவு நோய், பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ளது. இந்நோய் பற்றிய விழிப் புணர்வு இல்லாததால், கிராமப்புறங் களில் இன்றளவும் போலியோ என்றே நம்புகின்றனர். ஆரம்பத்தில் ஒரு குழந்தை நடக்க முடியாமல் விழுந் தால், சத்து குறைவாக இருக்கும் என வைட்டமினை உணவாகக் கொடுக் கிறார்கள். அதனால் உடல் எடை கூடி, இந்நோயின் தீவிரம் மேலும் கூடுகிறது. உடலில் உள்ள புரோட்டீன் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதால் ஆங்கில மருத்துவத்தில் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது.
புதிய முயற்சியாக என் நண் பர்கள், நான் சேர்ந்து 40 வகை மூலிகைகளைக் கொண்டு, தசை சிதைவு நோய்க்கு காயகல்பம் சித்த மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி யில் ஈடுபட்டுள்ளோம். ஆங்கில (அலோபதி) மருத்துவத் தால் தீர்க்க முடியாத பல வியாதி களை, சித்த மருத்துவத்தால் தீர்க்க முடிந்துள்ளது. தசை பிடிப்புக்கும் சித்தாவில் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு என்னுடைய உடலை வைத்துதான், சித்த மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு மருந்தையும் எனது உடலில் செலுத்தி குணமாக்க முயற்சி செய்கிறோம். மருந்து கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல். போலியோவைப் போல, இந்த நோயையும் உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்றார் நம்பிக்கையுடன்.