தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிலங்களை வாங்கி குவித்துவருவதால் விவசாய சாகுபடி பரப்பு 12 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்தார்.
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திருந்திய நெல் சாகுபடி தொடர்பான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் கு.ராமசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சே.கனகராஜ், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ஹெ.பிலிப், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஐ.முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ஹெ.பிலிப் பேசும் போது, ஒரு நாடு முன்னேற அதன் பின்னணியில் விவசாயிகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இரு மடங்கு உற்பத்தி, 3 மடங்கு வருமானம் என்ற அரசின் இலக்கை விவசாயிகள் ஓரளவு எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் உள்ளனர். இதற்கான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துதான் அரசு வழங்க முடியும். விவசாயிகள்தான் அவற்றைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவ வேண்டும், என்றார்.
துணை வேந்தர் கு.ராமசாமி பேசியது: சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலத்தில் நதியை நோக்கி ஓடியே மக்கள் விவசாயம் செய்தனர். தற்போது வைகையில் ஒரு கை வைக்கும் அளவுக்குக்கூட தண்ணீர் வரவில்லை. அனைத்து ஆறுகளுக்கும் வைகை ஆறு நிலைதான் ஏற்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகள் மறைந்துவிட்டன. ரியல் எஸ்டேட், பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வருவதால் தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. ஆனாலும், குறைந்த தண்ணீர், குறைந்த நிலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை அடைந்துள்ளது. தற்போது சிறுதானியங்கள் உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பருப்பு உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கிறது. சாகுபடி செய்த பயிரையே மீண்டும் சாகுபடி செய்வது மகசூல் குறைவுக்கு முக்கிய காரணம்.
ஐ.டி. துறையில் விருப்பமில்லா மல் தற்போது விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழுவாக இணைந்து கலந்துரையாடுவது, தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும். அதனால், விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பங்கள், ரகங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் குளம், ஏரிகளை மக்களே வெட்டி, அதில் நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்தனர். தற்போது எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரசின் ஒரு பங்குதாரராக மக்கள் மாறினால் மட்டுமே விவசாயத்தை மேம்படுத்த முடியும் என்றார்
கோழிகளை விளையாட விடுங்கள்
பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி மேலும் பேசியது: முன்புபோல் மழை பெய்யத்தான் செய்கிறது. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் பெய்துவிடுகிறது. அவற்றை தேக்கி வைக்க குளம், ஏரிகளை தூர்வார வேண்டியது அவசியம்.
விவசாயிகள் வேட்டி, சட்டை அணிவது தமிழர் கலாச்சாரம். அதுபோல் ரேக்ளா, கோழி சண்டை போன்றவை தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகள். அவற்றை விளையாட விட வேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாதது என்றார்.
வேளாண்மை இயக்குநர் சே.கனகராஜ் பேசும்போது, விவசாயிகள் வியாபாரிகளாக மாற வேண்டும். விளைபொருட்களை பதப்படுத்தி வியாபாரம் செய்தால் விவசாயிகள் தங்களுக்கான விலையை நிர்ணயம் செய்யலாம். கைக்குத்தல் அரிசி, மருத்துவ குணம் கொண்ட அரிசிகளை விவசாயிகள் பயிரிட வேண்டும், என்றார்.