தமிழகத்தில் குடும்ப அட்டை களை, ஸ்மார்ட் கார்டாக மாற்றும் திட்டத்துக்கு 2 ஐ.டி. நிறுவனங் களை தமிழக அரசு தேர்ந்தெடுத் துள்ளது. ஸ்மார்ட் கார்டு தயாரிக் கும் நிறுவனம் எது என்பது டிசம்பர் 1-ம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பல மாநிலங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் துணையுடன் போலி குடும்ப அட்டைகள் தவறாக பயன்படுத்தப் படுவதால், மத்திய அரசின் நிதிச் சுமை அதிகரித்தது. இதையடுத்து, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தில் இருந்து, மாநில அரசுகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
ஸ்மார்ட் கார்டு திட்டம்
தேசிய மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி, குடும்ப அட்டை களை ஸ்மார்ட் அட்டைகளாக உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகம், மேகாலயா, மஹாராஷ்டிரம், புதுவை, ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட மாக முன் மாதிரி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சம்பந் தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை கூறியது. இதற்காக, மத்திய அரசிலிருந்து நிதியுதவி தருவதாகவும் அறிவித்தது. இதன்படி ஹரியாணா, ஆந்திரம், கர்நாடகம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு அமலுக்கு வந்துவிட்டது.
குழப்பத்தால் தள்ளிவைப்பு
தமிழகத்தில் 2011-ல் குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மற்றும் ஆதார் தகவல் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. முதலில் தேசிய மக்கள்தொகை பதிவேடுப்படி ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின் இத்திட்டம், ஆதார் அடையாள அட்டைப் பதிவு என மாற்றப்பட்டது. இந்தக் குழப்பத்தால், தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் தள்ளிப்போனது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஆதார் பதிவுகள் நிறுத்தப் பட்டன. மேலும் ஆதார் அட்டைக்கு பாஜக ஆட்சியில் அங்கீகாரம் இருக்காது என்ற தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஸ்மார்ட் கார்டு திட்டம் மீண்டும் முடங்கியது. தற்போது மத்தியில் புதிய ஆட்சி வந்த நிலையில், ஆதார் அட்டை திட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட் டுள்ளன.
நிறுவனங்கள் தேர்வு
இதனால், தமிழகத்தில் மீண்டும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டப்பணிகள் தொடங்கின. தமிழக அரசின் சார்பில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்த தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டது. உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 2 தனியார் நிறுவனங்கள் கடந்த 20-ம் தேதி தேர்வு செய்யப்பட்டன.
இதுகுறித்து தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 20-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், எஸ்.ஆர்.ஐ.டி. இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கர்நாடக நிறுவன மும், ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தேர்வாகியுள்ளன. எஸ்.ஆர்.ஐ.டி., மருத்துவ ரீதியான தகவல் தொழில்நுட்பத்திலும், ஆமினி கார்ட் நிறுவனம் மின்சாரம் தொடர்பான தகவல் தொழில்நுட் பத்திலும் அனுபவம் பெற்றவை.
டிச.1-ல் ஒப்பந்தப்புள்ளி திறப்பு
இவர்கள் முதல்முறையாக ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு வந்துள்ளனர். இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப விளக்கம், வரும் 27-ம் தேதி அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் நடக் கிறது. தொழில்நுட்ப முன்வைத் தலை, தமிழக அரசின் எல்காட் தொழில்நுட்பக் கமிட்டி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் நிதிக் கமிட்டி பரிசீலிக் கும். பின்னர், டிசம்பர் 1-ம் தேதி, நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் நிதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு, ஸ்மார்ட் கார்டு தயாரிப்புக்கான நிறுவனம் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது, ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல் போலி எனத் தெரியவந்துள்ளது. அவற்றை நீக்கி விட்டு, ஆதார் பதிவில் முன்னணியில் உள்ள அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகளை முதல்கட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் 39 கோடி ரூபாய் நிதியுதவியுடன், ஸ்மார்ட் கார்டு திட்டத்தை ரூ.318 கோடியில் நிறைவேற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2015 இறுதியில் ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.