தமிழகம்

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி: வேல்முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் தற்கொலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வறட்சிக் கொடுமையால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்வு, நோய் காரணமாக விவசாயிகள் உயிரிழந்ததாக அமைச்சர்கள் கூறியிருப்பது கண்டிக் கத்தக்கது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

தேசிய வங்கிகள், அனைத்து வகையான கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்துசெய்ய வேண்டும்.

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT