சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களிடம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.525 கோடி லஞ்சம் வாங்கி யதாக கூறப்படும் புகாரை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த எஸ்.பி.ஸ்ரீனிவாஸ் என்ப வர் உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது:
சூரியசக்தி மின்சாரத்தை யூனிட் ரூ.6.48 என்ற விலையில் கொள்முதல் செய்வதாக தமிழ் நாடு மின்பகிர்மானக் கழகம் ஆரம்பத்தில் பல நிறுவனங்க ளுடன் ஒப்பந்தம் செய்துகொண் டது. இதை மீறி, ஒரு யூனிட் ரூ.7.01 என புதிதாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்து, அதானி குழுமம் உள்ளிட்ட 52 நிறுவனங்களுடன் மின்பகிர்மானக் கழகம் மீண்டும் ஒப்பந்தம் போட்டுள்ளது.
தமிழக மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்தபோது, அதானி குழுமத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிக எண்ணிக்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்களை அமைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரம் ரூ.5.01-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தனிப்பட்ட சிலரின் சுயலாபத்துக்காக ரூ.2 அதிகம் கொடுத்து ரூ. 7.01-க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நத்தம் விஸ்வநாதனுக்கு மட்டும் ரூ.525 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. ஆனால், கொள்முதல் விலையை கூடுதலாக கொடுப்பதன்மூலம் மின்பகிர்மானக் கழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் நான் ஏற்கெனவே புகார் அளித்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என தலைமைச் செயலாளர் பரிந்துரைத்துள்ளார். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.மணிவாசகம் ஆஜரானார். இந்த மனு தொடர்பாக சிபிஐ மற்றும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உள்ளிட்டோர் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.