தமிழகம்

அண்ணா சாலையை நகர சாலையாக்கி மதுக்கடைகள் திறந்தால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா சாலை உட்பட சென்னையில் உள்ள நெடுஞ்சாலைகளை நகர சாலைகளாக மாற்றும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் பாமக சார்பில் வழக்கு தொடர்வதுடன், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாமக தொடர்ந்த வழக்கில் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளிலும் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் குடிப்பகங்களும் ஏப்ரல் 1-ம் தேதியுடன் மூடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் குடிப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். அவர்களது குடும்பம் நிம்மதியாக வாழத் தொடங்கியுள்ளன. இதற்காக மகிழ்ச்சியடைவதை விடுத்து நட்சத்திர விடுதிகளின் மது வணிகம் குறைவதை நினைத்து கவலைப்படும் தமிழக அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

அண்ணா சாலையை தேசிய நெடுஞ்சாலை என்ற நிலையில் இருந்து நகர சாலையாக தரமிறக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் பகுதியிலுள்ள முத்துசாமி பாலம் முதல் தாம்பரம் வரையுள்ள 30 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியை நகர சாலையாக வகைமாற்றம் செய்து, அதற்கான அறிவிக்கை எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையையும் நகர சாலைகளாக வகைமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதுடன், பாமக சார்பில் மிகப்பெரிய அளவில் போரட்டம் நடத்தப்படும்'' என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT