சென்னையில் ஏராளமான கல்வித் துறை அலுவலகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாததால் இங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ளது டிபிஐ வளாகம். மிகவும் பழமை வாய்ந்த இந்த டிபிஐ வளாகத்தில் ஏராளமான கல்வித் துறை அலுவலகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர்.
ஆனால், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கழிப்பிட வசதி இல்லாததால், வளாகத்தில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளன. பல இடங்களில் புல் புதர்கள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது.
குறிப்பாக ஆண்கள் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், மண்டல ஆண்கள் உடற்கல்வி ஆய்வாளர், மகளிர் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகள் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கின்றன. அப்பகுதிகளிலும், மெட்ரிக் பள்ளி இயக்குநர் அலுவலகம் அருகிலும் குப்பைகள் கொட்டப்பட்டு அப்பகுதிகள் குப்பை மேடுபோல் காட்சியளிக்கின்றன.
பழுதடைந்த, உடைந்த வாகனங்களும் வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் டிபிஐ வளாகத்தில் உடனடியாக பணம் எடுப்பதற்கு ஒரு ஏடிஎம் மையம்கூட இல்லாதது பரிதாபம்.