18 வயது வரை உள்ள சிறுவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் என்று குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் ஆசி பெர்னாண்டஸ் இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
1986-ம் ஆண்டில் இயற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தை முறையாக அமல்படுத்தாததால், இந்தியாவில் குழந்தை தொழி லாளர்களை ஒழிக்க முடியவில்லை.
மேலும் குழந்தைகளுக்கான கட்டா யக் கல்வியை உறுதிப்படுத்தவும் இந்தியா தவறிவிட்டது. குழந்தை தொழிலாளர் சட்டத்தில் 14 வயது வரை உள்ளவர்கள் தான் குழந்தைகளாக கருதப்படுகிறார்கள். கட்டாய கல்வி உரிமைச் சட்டமும் 14 வயது வரைதான் செல்லும்.
14 வயது முதல் 18 வரை உள்ள சிறுவர்கள்தான் அதிகமாக குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். 18 வயது வரை உள்ள சிறுவர்களையும் குழந்தைகளாகத்தான் கருதவேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் 1986-ம் ஆண்டு முதல் இதுவரை யாருக்கும் சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.