அப்துல் கலாமின் ஏவுகணை தொழில்நுட்பத்தால் உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது என்று மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு உருவச் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘‘விஐடி பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களின் முன்னேற்றத்துக் காக விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
பொதுவாழ்வில் எளிமையைக் கடைபிடித்த அப்துல் கலாம், 2020-ம் ஆண்டுக்குள் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று விரும்பினார். கிராமப்புற மக்களுக்கான சேவையை, இளைஞர்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் என்றார்.
1967-ம் ஆண்டு முதல் நான் 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அக்காலக் கட்டத்தில் ஆட்சி யாளர்கள் மற்றும் எதிர்கட்சி யினர் நல்லுறவுடன் செயல் பட்டதால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒருநாள் கூட முடங்கியது கிடையாது. ஆனால், இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நிலவி வரும் லஞ்சம், ஊழல், கருப்புப் பணத்தால் நாட்டின் வளர்ச்சி பாதித்துள்ளது.
நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சிகளுக்கு ஒரே ஆண்டில் தேர்தல் நடத்தவேண்டும். மீதம் உள்ள நான்கு ஆண்டுகளில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் பணம், நேரம் விரயமாவது மிச்சமாகும்.
நாட்டில் அனைவருக்கும் உயர்கல்வி எட்டாக் கனியாக உள்ளது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 14 கோடி பேருக்காவது உயர்கல்வி கிடைக்க வேண்டும். ஆனால், 3.7 சதவீதம் பேருக்குத்தான் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கையில் அதற்கான வழிவகை இடம்பெற வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேகாலயா மாநில ஆளுநர் வி.சண்முகநாதன், அப்துல் கலாமின் உருவச் சிலையை திறந்துவைத்துப் பேசும்போது, ‘‘இந்தியாவை வல்லரசு நாடாக்க அப்துல் கலாம் ஆற்றிய பணிகள் மிகையானது. அப்துல் கலாம் உருவாக்கிய ஏவுகணை தொழில்நுட்பம் அழிவு சக்திக்கு மட்டும் அல்லாமல் ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி விண்வெளித் துறையில் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
அப்துல் கலாமின் கனவு நனவாகி வருகிறது. இதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் தரமான கல்விக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உயர்கல்விக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நோக்கிச் சென்ற நிலைமாறி வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு வரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, விஐடி பல்கலைக்கழகம் எடுத்துக்காட்டாக உள்ளது.
மாணவர்கள் வாழ்க்கையில் தவறான பாதைக்கு செல்ல வேண்டாம். லஞ்சம், ஊழல் இல்லாத நாடாக உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா பெண்மையை மதிக்கும் நாடு. சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடப்பது வேதனையாக இருக்கிறது. இமயம் முதல் குமரி வரை தீண்டாமை, வரதட்சணை இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் வி.ராஜூ, பதிவாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணை துணைவேந்தர் நாராயணன் நன்றி தெரிவித்தார்.