எனது தலைமையில் எந்த அணியும் செயல்படவில்லை என்று முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.
இதனால் தோப்பு வெங்கடாசலம் ஒரு அணியாக செயல்படுகிறார், அமைச்சரவையில் இடம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தோப்பு வெங்கடாசலம் கூறுகையில், ''முதல்வரை சந்திப்பதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் முதல்வரை சந்தித்தது வாடிக்கையான வழக்கமான சந்திப்புதான்.
தொகுதி சார்ந்த பிரச்சினை, மாவட்டம் சார்ந்த பிரச்சினை, இயக்கம் சார்ந்த பிரச்சினை என வருகிறபோது முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் சூழல் வருகிறது. நாங்கள் 8 பேரும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்திக்கவில்லை. அவரிடம் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையையோ, தனிநபர் கோரிக்கையையோ முன்வைக்கவில்லை.
நாங்கள் 8 பேர் சேர்ந்து எங்கள் கருத்துகளை சொன்னால் அதை அணியாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதற்கு அணி என்று ஒரு வடிவம் அமைக்க வேண்டியதில்லை. எனது தலைமையில் எந்த அணியும் செயல்படவில்லை'' என்றார் தோப்பு வெங்கடாசலம்.