சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டணம், 2015-ம் ஆண்டில் அமல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். விமான நிலைய வளாகத்தில் வாகன நிறுத்த கட்டணமாக காருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுவே உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தின் அருகில் காரை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிற்கும் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்த, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாகன நிறுத்த கட்டணம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகள் வந்துள்ளன. 2015-ம் ஆண்டில் வாகன நிறுத்த புதிய கட்டணம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விமான பயணிகள் கூறும்போது, ‘‘சென்னை விமான நிலையம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் இலவச குடிநீர், கழிப்பறை வசதிக்கூட இல்லை. வரவேற்க வருபவர்களுக்கு அமர்வதற்கு இடவசதி இல்லை. கால் வலிக்க நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்யாத விமான நிலையம், வாகன நிறுத்த கட்டணத்தை மட்டும் உயர்த்துவது சரியில்லை’’ என்றனர்.