சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தில் பல்லவர் கால சிற்பக் கலைகளை உலகுக்கு பறைசாற் றும் விதமாக கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் உட்பட பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன.மேலும், யுனெஸ்கோ நிறுவனத் தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலாத் தலமாகவும் மாமல்ல புரம் விளங்குகிறது. சிற்பங்கள் மற்றும் கடற்கரைக் கோயிலின் அழகைக் கண்டு ரசிக்க நாள் தோறும் ஏராளமான வெளிநாட்டி னர் வருகின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், விபத்து மற்றும் வேறு ஏதேனும் நோய் தொற்றுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டால், உள்ளூர் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால், மருத்துவ மனையில் போதிய வசதிகள் இல்லை என்றும், கட்டிடமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மருத்துவ மனையின் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையின் மிக அருகில் உள்ள இந்த மருத்துவமனையில், சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களுக்கு முதலுதவி அளிக்கும் வசதிகள் கூட போதிய அளவில் இல்லை என குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, உள்ளூர் நபர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்திலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஸ்ட பனோ கூறும்போது: அரசு மருத்துவமனையில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவ தால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள் ளது. மருத்துவமனையில் முறை யான சிகிச்சை வசதிகள் இல்லை. இதனால், சிகிச்சை பெற அச்சப் பட்டு பல கி.மீ. தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லாததால் செங்கல்பட்டுக்கு அனுப்புகின்றனர். அங்கு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணி களுக்கும் இதே நிலைதான். சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் சர்வதேச தரத்திலான மருத்துவ மனை அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, திருப்போரூர் எம்எல்ஏ கோதண்டபாணியிடம் கேட்டபோது, ‘சுற்றுலாப் பயணிகள், விபத்துகளில் சிக்குவோ ருக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்புகள் வரும் என எதிர் பார்க்கலாம்’ என்றார்.