“25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவோ அல்லது மாற்று இடமோ வழங்குங்கள் என்று அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குருடி மலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூச்சியூர் அருகே உள்ளது ராவூத்த கொல்லனூர். குருடி மலை அடிவாரத்தில் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம். இந்தப் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் உலவுகின்றன.
இந்தப் பகுதியில் விவசாய நிலங்களுக்கு இணையாக, புதிதாக வீட்டுமனைகளும் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் 30-க்கும் மேற்பட்ட முத்துராஜா சமூகத்தினர். தாங்கள் குடியிருக்கும் மனைக்கு பட்டா வழங்கக் கோரி கடந்த 2006-ம் ஆண்டு முதல் இவர்கள் மாவட்ட ஆட்சியர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், கூடலூர் ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதேசமயம், அப்பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிசாமி, வெள்ளியங்கிரி ஆகியோர் கூறியதாவது: நாங்கள் முன்பு குருடி மலை அடிவாரத்திலேயே குடியிருந்தோம். அங்கு பகல் நேரத்திலேயே யானைகள் வந்துவிடும். இதனால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த குட்டைப் பகுதிக்கு குடி வந்தோம். தொடக்கத்தில் இங்கு வீடுகளே கிடையாது. நாங்கள் வந்த பின்னர்தான் நிறைய குடி யிருப்புகள் உருவாகின. குருடி மலையில் மழை பெய்தால் இங்கு அதிக அளவில் தண்ணீர் வரும். ஊரின் இருபுறமும் உள்ள பள்ளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். எங்களது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகும். இதை சமாளிக்க, வீடுகளைச் சுற்றிலும் பள்ளம் தோண்டி, பெரிய குழாய்கள் அமைத்து காட்டு வெள்ளத்தை பள்ளத்துக்குள் செல்லுமாறு ஏற்பாடு செய்தோம்.
எங்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. வீட்டுக்கு மின் இணைப்பும் தரப்பட்டுள்ளது. எனினும், பட்டா மட்டும் கிடைக்கவில்லை. தேர்தல்களின்போது வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகள், கட்டாயம் பட்டா பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கின்றனர். அதற்குப் பின்னர் எங்கள் பகுதியை கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு பட்டா வழங்குங்கள். அல்லது மாற்று இடம் தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சிலர் எங்களை அணுகி, இந்த இடத்தை காலி செய்தால், வேறு இடத்தில் இடம் கிடைக்கும் எனக் கூறுகின்றனர். இதை எப்படி நம்ப முடியும். இங்கு 18 வீடுகள்தான் உள்ளன. ஒரு வீட்டில் 2, 3 குடும்பங்களாக வசிக்கிறோம். எனவே, எங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்றனர்.