தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 4-ம் தேதி நடக்கிறது: 52 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை மேற் கொள்வதற்கான 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே, 13-வது புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

15 பேர் குழு

இதைத்தொடர்ந்து தொழிற் சங்கங்களுடன் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், 13-வது ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் நடந்தது.

இதில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள், புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், வரும் 4-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க வருமாறு, சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 52 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக அரசுப் போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், போக்குவரத்து ஊழியர்கள் சங்கங் களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கோரிக்கைகளுடன் முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

2-ம் கட்ட பேச்சுவார்த்தை

இந்நிலையில் வரும் 4-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்ற னர்.

SCROLL FOR NEXT