அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து போலி மதுபாட்டில்களைத் தயாரித்து வழங்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3,600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு ஸ்டேட் பாங்க் காலனியில் சில நாளுக்கு முன், போலி புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பாண்டி, அவரது மனைவி சாந்தி ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 3,600 போலி மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களைத் தயாரித்து வழங்கிய புதுச்சேரி குண்டுபாளையத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி சிவலிங்கம் (42), கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் (28) ஆகியோரைத் தேடிவந்தனர்.
புதன்கிழமை திண்டுக்கல் அய்யலூரில் திண்டுக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீஸார், சிவலிங்கம், கணேசனைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட அரசியல் கட்சிகள், தங்கள் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்குவதற்காக நிரந்தரமாக புதுச்சேரியில் இருந்து இவர்கள் மூலம் போலி மதுபாட்டில்களை வாங்கி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் புதுச்சேரியில் இருந்து லாரி மூலம் 4,500 புதுச்சேரி போலி மதுபாட்டில்களை முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மொத்தம், மொத்தமாக சப்ளை செய்ய வத்தலகுண்டு சாராய வியாபாரிக்கு வழங்கியுள்ளனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது, போலி லேபிளை வைத்து போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் மாவட்டத்தில் உள்ள பல சாராய வியாபாரிகளுக்கு புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வழங்கியுள்ளனர்.
வரும் மக்களவைத் தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இவர்களிடம் முன்கூட்டியே குறைந்தவிலை போலி மதுபாட்டில்களைத் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுத்து இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைது செய்த 4 பேரிடம் இருந்து போலி லேபிள் அச்சடிக்கும் இயந்திரம், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.