தமிழகம்

தமிழக கடலோர பகுதிகளில்புதிதாக 13 ரேடார்கள் அமைப்பு- கடலோர காவல்படை ஐ. ஜி தகவல்

செய்திப்பிரிவு

தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக மேலும் 13 ரேடார்கள் பொருத்தப்பட உள்ளதாக கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. கமாண்டர் எஸ்.பி.ஷர்மா கூறினார்.

பிப்ரவரி 1-ம் தேதி இந்திய கடலோர காவல் படையின் 38-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னை அருகே நடுக்கடலில் காவல்படையினர் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர். இதில் கலந்துகொண்ட கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., கமாண்டர் எஸ்.பி.ஷர்மா, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

நமது மீனவர்கள் இந்திய கடலில் பகுதியில் தாக்கப்படு வதில்லை. பாக் ஜலசந்தி முக்கிய மாக கவனிக்கப்பட வேண்டிய பகுதி. அங்கும் மற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படை தீவிரமாக செய்து வருகிறது. மீனவர்கள் பிரச்சினை குறித்து வரும் 27-ம் தேதி நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் கடலோர காவல் படை கலந்து கொள்வது பற்றி எங்களுக்குத் தகவல் எதுவும் வரவில்லை.

மீனவர்களுக்கான அவசர உதவி எண் 1554-ல் இனி தமிழிலேயே தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய கடல் பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்க கிழக்கு பிராந்தியத்தில் 13 ரேடார்கள் உள்ளன. மேலும் புதிதாக தமிழக கடற்கரைக்கு 13 ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன. கூடங் குளம் அணு மின் நிலையத்தைப் பாதுகாக்க கடலோர காவல்படை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

மெரினா கடற்கரையில் இருந்து கடலின் உள்ளே 50 நாட்டிகல் மைல் தூரத்தில் 8 விமானம் தாங்கி கப்பல்கள் சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.

SCROLL FOR NEXT