தமிழகம்

திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் பகுதியில் வீட்டு மனைகளான 1 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள்: அழிவுப்பாதையில் செல்லும் விவசாயம்

இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுகுன்றம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு காலத்தில் நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியது. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 942 ஏரிகள் உள்ளன. இவற்றில் நூற்றுக் கணக்கான ஏரிகள் திருக்கழுகுன்றம், திருப்போரூர் பகுதிகளில் அமைந்துள்ளன.

திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் பகுதியில் இந்த ஏரிகள் முறையாக தூர்வாரப் படாமலும், அதற்கான வரத்து வாய்க்கால்கள் சீர் செய்யப்படாமலும் உள்ளன. இதன் காரணமாக ஏரி, குளங்களில் போதிய நீர் வரத்து இல்லாமல் விவசாய உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலும் விரிவடைந்து தொடர்ந்து விவசாய விளை நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு அவை விளைநிலங்களாக மாற்றப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியது: விவசாயம் நடைபெறும் நன்செய் நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும். வீட்டுமனைகளை விற்பவர்கள் ஏரி, குளங்களின் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் 4.75 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் இருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது ஆகியவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.செல்வம் கூறும்போது, ‘ஏரி, குளங்களில் மண் அள்ளுவதற்கு மூன்று அடி அனுமதி அளித்துவிட்டு 15 அடி வரை மண் அள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஏரிகளில் தேங்கும் தண்ணீர் மதகுகள் வழியாக விவசாய நிலங்களுக்குச் சென்று பாய்வதில்லை. இதனால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் வேறு வழியில்லாமல் ரியல் எஸ்டேட் தரர்கர்கள் வசம் சிக்கும் நிலை ஏற்படுகிறது ’ என்றார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாயத்துறை இணை இயக்குநர் சீத்தாரமானிடம் கேட்டபோது விவசாய சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைய வில்லை. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விவசாய சாகுபடி பரப்பு கடுமையாக குறைந்துள்ளது. மழைக்கு முன் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT