முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று 3-வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் வழக்கமான உணவை உட்கொள்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். முதல்வருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் வெளி யிட்ட அறிக்கையில், ‘காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரண மாக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்ட அறிக் கையில், ‘முதல்வர் ஜெயலலிதா வுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்’ என்று தெரிவிக் கப்பட்டது.
இதையடுத்து, அதிமுகவினர் நேற்று 2-வது நாளாக பல்வேறு சிறப்பு வழிபாடு நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு வந்து, முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயா ளிகள், அவர்களுக்கு உதவியாக வருபவர்கள் என அனைவரும் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி அப்போலோ மருத்துவமைனைக்கு செல்லும் கிரீம்ஸ் சாலை முழுவதும் நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கிரீம்ஸ் சாலையில் நேற்று போக்குவரத்து வழக்கம்போல அனுமதிக்கப்பட்டது.
கிரீம்ஸ் சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மருத்துவர்கள், மருத் துவமனையின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர் களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. நோயாளி களுக்கு உதவும் வகையில் இந்தப் பாதையில் நேற்று பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன.
அப்போலோ மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று காலை 11.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் ஜெய லலிதாவின் உடல்நிலையை மருத்து வர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் செல்வாரா?
முதல்வர் ஜெயலலிதா கூடுதல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லப் போவதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, ‘‘சிகிச்சைக் காக முதல்வர் சிங்கப்பூர் செல்லவி ருப்பதாக வாட்ஸ்-அப்பில் தவறான செய்தி பரவி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல்வர் மிகவிரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.