கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப். வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய விலை உயர்ந்த கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ரூ.5 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல கார்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து தமிழகம், கேரளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் விற்பனை செய்துள்ளார்.
இப்படி 450–க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ததில் அன்னியச் செலவாணி மோசடி செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. சிபிஐ போலீஸார் இந்த வழக்கை விசாரித்து அலெக்ஸ் ஜோசப்பை 2011-ம் ஆண்டு கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க முயற்சித்தபோது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
இவரைப் பிடிக்க சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரது பாஸ்போர்ட் தகவல்கள் அனுப்பப்பட்டன. நீண்ட காலம் கழித்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார்.
அலெக்ஸ் ஜோசப் தமிழகத்தில் 18 கார்களை விற்றிருக்கிறார். பிரபல அரசியல் தலைவரின் மகன், முன்னிலை நடிகர், நடிகைகள், வசதியான தொழில் அதிபர்கள் இவரிடம் இருந்து கார்களை வாங்கியுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் விற்கப்பட்ட சொகுசு கார்கள் விற்பனை குறித்து தமிழக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்த விசாரணைக்காக அலெக்ஸ் ஜோசப் திங்கள்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தனி அறையில் அலெக்ஸ் ஜோசப் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்டது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டெல்லி விமான நிலையத்தில் அலெக்ஸ் ஜோசப் வந்திறங்கியதும், அவர் குறித்த தகவல்கள் கிடைத்து விட்டன. அவரை விமான நிலையத்தில் கைது செய்யாமல் கண்காணிக்கத் தொடங்கினோம். விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக தாஜ் பேலஸ் ஓட்டலில் சென்று தங்கினார். சில மணி நேரம் அவரது நடவடிக்கைகளை கண்காணித்த பிறகு அவரை ஓட்டலில் வைத்து கைது செய்தோம்.
சென்னையில் கார்களை விற்றதில் ரூ.48.50 கோடிக்கு அவர் வரி எய்ப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 1988 வரி எய்ப்பு சட்டம் 120பி, 420, 467, 468, 468, 471, 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்பட முக்கிய நகரங்களில் வீடுகளும், அலுவலகங்களும் உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள புதிய கார்களை இந்தியா கொண்டு வந்தால், அந்த காரின் விலையை விட 3 மடங்கு தொகையை சுங்க வரியாக செலுத்த வேண்டும். சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக வழங்கப்பட்ட வெளிநாட்டு காரை இந்தியா கொண்டு வந்தபோதும் இந்த பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய கார்களை கொண்டு வருவதற்குத்தான் இந்த விதிமுறைகள் உள்ளதே தவிர, பழைய கார்களை கொண்டு வருவதற்கு வரிகள் மிகவும் குறைவு. இந்த ஒரு ஓட்டையை பயன்படுத்தி மோசடிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
வெளிநாட்டு கார் நிறுவனங்களில் புதிய கார்களை வாங்கி அவற்றை வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்களில் பதிவு செய்து, அந்த கார்கள் சில ஆண்டுகள் அங்கு ஓடியதாக போலியாக ஆவணங்களைத் தயார் செய்து, அவற்றை வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் கொடுத்து பின்னர் இந்தியா கொண்டு வருகிறார். இவரது மோசடிக்கு சில துறைமுகம் மற்றும் கார் நிறுவன அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். ஹம்மர், லம்பார்கினி, லக்ஸஸ், ரோல்ஸ்ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள் இதில் அடக்கம்.
தற்போது கைதாகி இருக்கும் அலெக்ஸ் ஜோசப் ஒரு பினாமி என்றும், இவரை இயக்குவது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் மகன் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார் அந்த அதிகாரி.