பண்ருட்டியில் விபத்தில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் இருந்தபடி 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.
பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி. புதன்கிழமை தொடங்கிய பொதுத்தேர்வை எழுதுவதற்காக பண்ருட்டி சுப்ராயலு செட்டியார் அரசு பள்ளிக்கு தனது சகோதரர் ஆனந்தபாபுவுடன் மொபட்டில் சென்றார். அப்போது அங்குச்செட்டிப்பாளையத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்குடன் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த நிலையில் மாணவி தேர்வெழுத அனுமதி கோரினார். மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மூலம் மாணவி மருத்துவமனையிலேயே ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வெழுத சிறப்பு அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியரை உடன் அமர்த்தி ஸ்கிரைப் முறையில் (மாணவி சொல்ல ஆசிரியர் பதிலெழுதுதல்) தேர்வெழுதினார். மாணவியின் உடல்நிலையைப் பொறுத்து அடுத்த தேர்வும் அவ்வாறு எழுத அனுமதிக்கப்படுவார் என சிஇஓ தெரிவித்தார்.