தமிழகத்தில் சத்துணவுத் திட்டத் தைக் கொண்டு வந்தது யார்? என்பது தொடர்பான ருசிகர விவாதம் சட்டப் பேரவையில் நேற்று நடந்தது.
சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி பேசும்போது, திமுக தலைவர் கருணாநிதி உழவர் சந்தை திட்டம் கொண்டு வந்தார். இப்போது பண்ணை பசுமைக் கடைகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு குறுக் கிட்டுப் பேசும்போது இரண்டு திட்டங் களும் வேறு வேறு. இரண்டையும் முடிச்சு போடக்கூடாது என்றார்.
அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, “விவசாய விளைபொருட்களை எடுத்து வந்து விற்பதற்காக உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. காய்கறி கள் விலை ஏற்றத்தைக் கட்டுப் படுத்துவதற்காக பண்ணை பசுமைக் கடைகள் இந்த அரசால் தொடங்கப் பட்டன. உழவர் சந்தையில் விளை பொருட்களை விவசாயிகள் விற் பனை செய்யவில்லை. வியாபாரி கள்தான் விற்பனை செய்கிறார்கள்” என்றார்.
திமுக உறுப்பினர் ரகுபதி தொடர்ந்து பேசும்போது, எப்படி சத்துணவுத் திட்டத்துக்கு முன் னோடி மதிய உணவுத் திட்டமோ அதுபோலத்தான் இந்த திட்டங் களும் என்றார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜு மீண்டும் குறுக்கிட்டுப் பேசும் போது, “காமராஜர் ஆட்சிக் காலத் தில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப் பட்டது. ஆனால் சத்துணவுத் திட்டம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அனைத்து பள்ளிகளிலும் தொடங் கப்பட்டது. இந்த திட்டத்தை முதல் வர் ஜெயலலிதா இப்போது சிறப் பாக நடத்தி வருகிறார்” என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசும்போது, காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் சத்துண வுத் திட்டம் முறையாக நடத்தப்பட் டதா என்பதை அதன் உறுப்பினர்கள் விளக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.