தமிழகம்

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கு: 2 நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வு அமைப்பு - மே 2, 3 தேதிகளில் விசாரணை

செய்திப்பிரிவு

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்காக 2 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த அமர்வு, மே 2, 3 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்துகிறது.

முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே விளக்கக் குறிப்பேட்டினை வெளியிட்டு, அதனடிப்படையில் கவுன்சலிங் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதன்படி, அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் கடினமான, தொலைதூர, மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் அதிகபட்சமாக 10 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரருக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் மதிப்பெண்ணுடன் கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கவும், இந்த மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்தவும் உத்தரவிட்டார்.

இதனால் தமிழகத்தில் நடை பெறவிருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தின் இந்த உத்தரவால் அரசுப் பணியில் உள்ள பிற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ‘அரசுப் பணியில் உள்ள தமிழக மருத்துவ மாணவர்களின் சட்ட ரீதியிலான உரிமை தொடர்பான இந்த வழக்கை இரு தரப்பிலும் போதிய அவகாசம் கொடுத்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே, கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு அமர்வை அமைக்க தலைமை நீதிபதியிடம் மனுதாரர்கள் கோரலாம்’ என உத்தரவிட்டது.

அதன்படி, மே 7-ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சலிங்கை தமிழக அரசு நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக, இந்த மேல்முறையீட்டு மனுக்களை மட்டும் பிரத்யேகமாக விசாரிப்பதற்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.எஸ்.சுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு அமர்வு வரும் மே 2, 3 ஆகிய தேதிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உள்ளது.

SCROLL FOR NEXT