தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி தமிழக அரசு சனிக்கிழமை அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியதோடு, வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம், சட்டமாக இயற்றப்படும் என்றும் உறுதி கூறினார்.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச சட்டத்துக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை உத்தரவு பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான சூழலையும், இக்கட்டான நிலையையும் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேவியட் மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்.

தமிழக அரசு தரப்பின் கருத்தைக் கேட்காமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT