காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. இதன் காரணமாக முட்டைக்கோஸ் கிலோ ரூ.4-க்கும், தக்காளி மற்றும் பீட்ரூட் கிலோ ரூ.8-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 1900-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு அதிக அளவிலான காய்கறிகள் வருகின்றன. கடந்த ஒரு மாதமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால், பல காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி முட்டைக்கோஸின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.4-க்கு விற்கப்பட்டது. தக்காளி மற்றும் பீட்ரூட் ஆகியவை கிலோ ரூ.8-க்கும், கேரட், கத்தரிக்காய், காலிபிளவர், உருளை, வெங்காயம் ஆகியவை கிலோ ரூ.10-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை பூ, காய், கனி மொத்த வியாபாரிகள் நலச்சங்க செயலர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறும்போது, “வழக்கமாக 250 முதல் 350 லாரிகளில் காய்கறிகள் வரும். இது தற்போது 450 லாரிகளாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விளைச்சல் அதிகரித்ததால், அதன் விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் கிலோ ரூ.4 வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று பல காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது” என்றார்.