தமிழகம்

பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளர்.

இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. மாணவர்கள் கல்வியில், வாழ்க்கையில் முன்னேறி குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஆசிரியர்களின் பணி அடித்தளமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி அவர்களின் கோரிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை.

தமிழகப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைக்கிறார்கள். குறிப்பாக அமைதியான வழியில் தங்களின் கோரிக்கைகளை அரசுக்குப் பலமுறை எடுத்துரைத்தும், பேச்சு வார்த்தை நடத்தியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

முக்கியமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்து, அதனை 6-வது ஊதியக்குழு வழங்கப்பட்ட நாள் முதல் ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அண்மைப் பள்ளித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 40% ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தைப் பதவி உயர்வு பணியிடமாக மாற்ற வேண்டும், விலையில்லாப் பொருட்களை பள்ளிக்கு வழங்கும் போது நேரிடையாக வழங்க வேண்டும் போன்ற 16 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழகப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு முதலில் செவி சாய்க்க வேண்டும். இதற்காக ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, உடனடியாக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, ஆசிரியர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதுதான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT