தமிழகம்

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 290 பேர் மீது வழக்கு பதிவு ; ரூ.1.25 லட்சம் அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீஸார் நடத்திய வாகன சோதனையில், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 290 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னையின் முக்கிய சாலைகளில் பைக், கார் பந்தயங்கள் அடிக்கடி நடப்பதாகவும், பலர் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய்குமார் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மெரினா காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், ராஜாஜி சாலை, ராயபுரம் பழைய ரயில்வே மேம்பாலம், பூந்தமல்லி 400 அடி சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை ஆகியவற்றில் 100 இடங்களில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சிறப்பு தணிக்கை நடத்தினர். இதில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகவும், வாகன விதிகளை மீறியதாகவும் 290 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் அபராதமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT