சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெறாமல்இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய தாக இல்லை. பேரவைத் தலைவர் நடுநிலைமை யோடு செயல்பட வேண்டும், என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தமாகா கட்சியின் நகர, வட்டார, கிராம நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியது:
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என மத்திய நீர்வள, ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மழையின்மையால் விவசாயிகள் நலிவடைந்துள்ளனர். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திடமிருந்து பெற்றத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசு விவசாயகளின் வங்கிக் கடனை தனியார் மூலம் வசூல் மற்றும் ஜப்தி செய்வதை கைவிட வேண்டும்.
மாணவர் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக் கடனை தனியாரிடம் கொடுத்தது கண்டனத்திற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (26-ம் தேதி) சென்னை பிராட்வே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமாகா கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். என்இசிசி அறிவிக்கும் முட்டை விலைக்கும், டெண்டர் விலைக்கும் மாறுபாடு இருப்பதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் இல்லை என்ற நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். காவல் துறை மசோதா மிக முக்கியமான மசோதாவாகும். அதன் மீதான விவாதத்தில் இருக்கும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் அமர வைக்கும் நிலையை ஏற்படுத்த வில்லை. சட்டப்பேரவை மக்கள் மன்றமாக நடைபெறவில்லை. எதிர்கட்சியினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெறாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. பேரவைத் தலைவர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியை தமாகா சிறப்பாக தொடங்கியுள்ளது. தேர்தல் நெருக்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செயற்கையானது. அந்த வகையில் ஒரு சாரார் அடைந்த வெற்றி குறித்து, திமுக தலைவர் கருணாநிதி எழுப்பியுள்ள கேள்வி, மக்களிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை பொறுத்தவரை நன்மை, தீமை இரண்டும் உள்ளது. நாட்டின் நலன் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றார். கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.