கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வழி தவறி வரும் வனவிலங்குகளிடம் நெருக்கம் காட்ட முயல்வதால் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு மாடுகள் அதிகளவில் உள்ளன. இவை அவ்வப்போது கொடைக்கானலைச் சுற்றியுள்ள ஆட்கள் நடமாட்டமுள்ள சுற்றுலா பகுதிகள், கொடைக்கானல் நகர் பகுதிக்குள் வந்து செல்வது வழக்கம். வனப்பகுதிக்குள் இருந்து வழி தவறிவரும் இவை, சில நேரங்களில் எந்தவித இடையூறும் செய்யாமல், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை கடந்து செல்கின்றன. சில நேரங்களில் மனிதர்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில், அவர்களை தாக்கவும் தயங்குவதில்லை.
கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டுமாடு தாக்கியதில் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காட்டு மாடுகள் சுற்றுலாத் தல பகுதியில் உலவும்போது சற்று ஒதுங்கி அதற்கு வழிவிடாமல், அவற்றின் அருகே சென்று ‘செல்பி’ எடுப்பது, புற்கள் கொடுப்பது என சுற்றுலா பயணிகள் சிலர் செயல்படுகின்றனர். இதை, தங்களை துன்புறுத்த வருவதாக கருதும் காட்டு மாடுகள் அவர்களை தாக்குகின்றன.
காட்டுமாடுகள் பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்தாலும் மூர்க்க குணம் கொண்டவைதான். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு காட்டு மாடுகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளன. ஆனால், இவற்றை தூரத்தில் நின்று ரசிப்பதை விட்டுவிட்டு, அவற்றின் அருகில் செல்வதால்தான் எதிர்வினைகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: காட்டு மாடுகளை கண்டால், அவற்றை கற்களை கொண்டு விரட்டவோ, அவற்றின் அருகில் இருந்து படம் எடுத்துக் கொள்ளவோ வேண்டாம். சற்று ஒதுங்கி அவை செல்லும் வரை அமைதி காத்தால், எந்த தொந்தரவும் செய்யாமல் சென்றுவிடும். இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். இருந்தும், சிலர் அதையும் மீறி செயல்படுவதால் காட்டுமாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதிக்குள் நுழையும் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். இதற்கென குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.