தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, மகளிரைக் கொண்டு, பூத் கமிட்டிகள் அமைக்கும் முனைப்பில் தே.மு.தி.க. இறங்கியுள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளர் ஜோதி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ராஜேஸ்வரி, ரீட்டா, சீதாலெட்சுமி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் இந்திரா வரவேற்றார்.
தே.மு.தி.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெகன்னாதன் பேசுகையில், 'கிழக்கு மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்குட்பட்டு 600க்கும் அதிகமான பூத்கள் இருக்கின்றன. பூத் ஒன்றிற்கு 10 பேர் அடங்கிய மகளிர் கமிட்டி அமைக்கும் பணியை துவங்க இருக்கிறோம். அதற்கான முன்னோட்டம் தான் இந்த கூட்டம். வரும் 20ம் தேதி மாநில மகளிரணி நிர்வாகிகள் வர இருக்கிறார்கள். அதற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும்' என்றார்.
மகளிர் வாக்குகள் தான் தமிழக அரசியலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக விஜயகாந்த் நம்புகிறார். அதனால் இந்தப் பணியை முடுக்கி விட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகளின் பூத் கமிட்டியில் ஆண்கள் தான் இருப்பர். மகளிரை பயன்படுத்துவதால் பெண்களின் வாக்குகளை கவர உதவியாக இருக்கும். பூத் கமிட்டியில் இருக்கும் பெண்கள், வாக்குச்சாவடியின் பூத் ஏஜென்ட் பணி தொடங்கி, முடிவு எண்ணப்படும் இடம் வரை பணியில் இருப்பர், என்கின்றனர் தே.மு.தி.க.வினர். விஜயகாந்த் ஆசை ஈடேறுமா என்பது தேர்தல் நெருக்கத்தில் தான் தெரியும்.