தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்த முயலும் பல நலத்திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்காமல் முட்டுக்கட்டை போட்டார் என பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
பட்டுக்கோட்டை, மதுரை, தென்காசி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பாஜக தலைவர் அமித்ஷா பேசினார்.
அமித்ஷா பிரச்சாரப் பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்:
1. தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசு வேண்டுமா அல்லது அதிமுக, திமுக போன்ற ஊழல் அரசுகள் வேண்டுமா என்பதை வாக்காளர்கள் சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, திமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. ‘அ’ என்ற ஒரு எழுத்தைத் தவிர. மற்றபடி, இருவரும் தமிழகத்தை போட்டி போட்டுச் சுரண்டியவர்கள்.
2. மத்தியில், 2014-ல் நடைபெற்ற தேர்தலில், 30 ஆண்டுகளாக இந்த நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டு, மோடி தலைமையிலான அரசு அமைந்தது. அது போன்ற தொடக்கம், தமிழகத்திலும் ஏற்பட வேண்டும். மீண்டும், மீண்டும் திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காமல், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். இங்கேயும் ஒரு மாற்றத்தை தொடங்கலாம்.
3. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து ரூ.12 லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளன. பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல், ஆகாயத்தில் 2 ஜி ஊழல் என எவற்றையும் விட்டுவைக்கவில்லை. அதிமுகவின் தலைவியோ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். இவர்களுக்கு ஊழலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக, அதிமுகவால் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ஒருபோதும் கொடுக்க முடியாது.
4. நாடு முழுவதும் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் வித்தியாசமாக, குழந்தைகள் அருந்தும் பால் கொள்முதலிலும் கலப்படம் செய்து ஊழல் நடந்துள்ளது. இது, வருந்தத்தக்கது. ஆற்று மணலில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடியை அதிமுக அரசு கொள்ளையடித்துள்ளது. மோடி ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, துன்புறுத்தல் போன்றவை நடைபெறுவதில்லை.
5. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரணமாக வழங்கினார். ஆனால், அந்த நிதியை மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்தாமலும், ‘அம்மா’ பெயரில் அனைவருக்கும் தலா ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.
6. மத்தியில் 2 ஆண்டுகளாக பாஜக தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசத்தின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் வைத்து பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மோடி பிரதமரான பிறகு 2 ஆண்டுகளில், தமிழக மீனவர்கள் யாரும் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்படவில்லை. தேசத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி ஊழலின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
7. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அதற்கு தமிழக அரசு உரிய அனுமதி கொடுக்காமல் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறது.
8. ஏழை பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர், ரூ.180 கோடியில் கிராமப்புற சாலை மேம்பாடு, முத்ரா திட்டத்தில் இளைஞர்களுக்கு சுயதொழிலுக்கு நிதியுதவி, கரும்பு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு என்று பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதாவின் அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மீண்டும் அவருக்கு வாக்களித்தால் இதுபோன்ற பல்வேறு நல்ல திட்டங்களும் தமிழகத்துக்கு கிடைக்காமல் போய்விடும்.
9. 24 மணி நேரம் மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான உதய்ஜோதி திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முன்வந்தது. இதற்கு ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இதுபோல் மத்திய அரசின் பல நலத் திட்டங்களை தமிழக அரசு ஊழல் மூலம் வீணாக்கிவிட்டது. ஊழலற்ற ஆட்சியை வழங்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
10. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஊழல் புரிந்துள்ளன. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல ஒரே வழி பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பது மட்டும் தான்.