தமிழகம்

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமா? மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின்கட்காரி ஆய்வு

எஸ்.முஹம்மது ராஃபி

சேதுசமுத்திரம் திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (செவ்வாய்கிழமை) ராமேசுவரம் வருகிறார். அவர் மண்டபத்திலிருந்து தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையேயான மணல்தீடைகள், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக சேது சமுத்திர திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

சேதுசமுத்திர திட்டம்

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இந்த கடற்பகுதியில் கடலின் ஆழம் அதிகப்பட்சம் 12 அடியாகும். இந்த மணல்தீடைகள் அதனை ஒட்டிய மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பரப்புபகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் திட்டம்.

ஆதரவு

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். இதனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறைவதுடன் கப்பல்களின் 30 பயண நேரம், எரிபொருள் சேமிப்பு ஏற்படும். மேலும் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகம் மேம்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகமும் தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

எதிர்ப்பு

மன்னார், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும், கடலரிப்பு, மீன் இனங்கள் இடம் பெயரும் அபாயம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் கருத்துகள் சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிரான கருத்துகளாக உள்ளன.

ராமர் பாலத்திற்கு ஆபத்தா?

சேதுபாலம், ஆதாம் பாலம், இராமர் பாலம் என அழைக்கப்படும் தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதிகள் இராமாயணம் மற்றும் இந்து சமய நம்பிக்கைளோடு தொடர்புடையது. மேலும் இராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. சேதுசமுத்திர திட்டத்தினால் இந்த மணல் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்க்கின்றன.

சேதுசமுத்திரம் திட்டத்தால் ராமர் பாலம் பகுதிக்கு சேதம் ஏற்படும். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலம் பகுதிக்கு சேதம் வராமல் தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திரம் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு உச்சநீதிமன்ற பரிந்துரைத்தது.

நிதின்கட்காரி ராமேசுவரம் வருகை

செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் மண்டபம் கடற்படை முகாமிற்கு வருகை தரும் நிதின்கட்காரி ஹெலிகாப்டர் மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்விற்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடியிலான அரசு சேதுசமுத்திர திட்டம் குறித்த தனது முடிவை அறிவிக்கும் என தெரிகிறது.

முன்வரலாறு:

1860- ஆங்கிலேயே கடற்படையைச் சார்ந்த ஏ.டி.டெய்லரின் என்பவர் முன்மொழிகிறார்.

1914 - தனுஸ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு. தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

1955- பிரதமர் ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு"

998 லட்சம் ரூபாய்க்கான சேது சமுத்திர திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.

1983- பிரதமர் இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.

2005 - ஜூலை 2ல் சேது சமுத்திர திட்டப்பணிகள் மன்மோகன் சிங்கால் 2,427 கோடி மதிப்பில் மதுரையில் துவக்கி வைக்கப் படுகிறது.

2009 - ஜூலை, 27ம் தேதி வரை, 831.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT