அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கர்நாடக மாநில செயலர் புகழேந்தி பங்கேற்க உள்ளார்.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன். இவர் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகியுள்ளார்.
அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி விதித்த நிபந்தனைக்கு ஏற்ப, பேச்சுவார்த்தை நடத்த அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டவர்களை ஒதுக்கிவிட்டதாக அமைச் சர்கள் உள்ளிட்டோர் அறிவித் துள்ளனர். ஏற்கெனவே கட்சி நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிவிட்டதாக தினகரனும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிப்பாண்டி கூறியது: அதிமுகவை வழிநடத்தும் தகுதி தற்போதைய நிலையில் தினகரனுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அவரையே ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. கட்சி தோற்றபோதெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வரவைத்ததுடன், கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் தினகரன். திமுகவை தைரியமாக எதிர்க்கக்கூடியவர். அவர் இல்லாமல் இன்று கட்சி நிர்வாகிகள் தத்தளிக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் தூதுவராக செயல்படுகிறார். அதிமுக (அம்மா) அணியினரும் அமைதி காக்கின்றனர். ஆனால் தினகரன் மீது மத்திய அரசு வழக்குகளை தொடுத்து பழிவாங்கி வருகிறது. இதை யாரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இதே நிலை நீடித்தால் அதிமுகவையே அழிக்கவும் முற்படுவார்கள். இதற்கு மேலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சக்தி எங்களுக்கு இல்லை. தினகரவை காக்க அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்துள்ளோம். தினகரனுக்கு எதிராக வஞ்சகமாக தொடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகளையும், சதிகளையும் கண்டித்தும், அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் என்பதை உணர்த்தவும் இன்று மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இதில், கர்நாடக அதிமுக (அம்மா) பிரிவு செயலர் புகழேந்தி பங்கேற்று பேசுகிறார். அமைச்சர் செல்லூர் கே.ராஜுவைத் தவிர மதுரையிலுள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என யாரும் எதிர்ப்பு தெரிவி க்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவர்’ என்றார். அதிமுக (அம்மா) அணியின் முக்கிய நிர்வாகிகள் அமைதியாக இருக்கும்போது, தொண்டர்கள் போர்வையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.