வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு, பராமரிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 1.05 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா திடீரென சென்றார். கடந்த மார்ச் மாதம், தான் பெயர் வைத்த வெள்ளைப் புலிக்குட்டிகள் மற்றும் யானைக்குட்டிகள், நீர் யானை, வரிக்குதிரை, மான் உலா விடம், வெள்ளைப்புலி, பாம்பு குடில், சிங்கவால் குரங்கு உள்பட பல்வேறு விலங்குகளை பார்வையிட்டார்.
அதிகாரிகளிடம் விசாரிப்பு
ஒவ்வொரு விலங்கும் எப்படி பராமரிக்கப்படுகின்றது, அதற்கு வழங்கப்படும் உணவு முறைகள், மருத்துவ வசதிகள் உள்பட அனைத்து விவரங்களையும் பூங்கா அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பூங்காவில் அமைக்கப்பட உள்ள அம்மா உணவக கட்டிடம், கடந்த ஆண்டு தனது பிறந்த நாளில் நடப்பட்ட மரக்கன்றுகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
முதல்வர் சுமார் 3 மணி நேரம் பூங்காவை முழுமையாக சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தி னார். செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு விடுமுறை என்பதால் பார்வையாளர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகள் பலி எதிரொலி
வண்டலூர் உயிரியில் பூங்காவில் கடந்த மார்ச் 18-ம் தேதி 4 வெள்ளைப் புலிக்குட்டிகள் உள்பட 7 புலிக்குட்டிகளுக்கு முதல்வர் பெயர் வைத்தார். அதில் சித்ரா என்ற 1 வயது வெள்ளைப் புலிக்குட்டி திடீரென இறந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைப் புலிக்கும் வங்கப் புலிக்கும் பிறந்த 2 குட்டிகளை தாய்ப் புலி கடித்துக் கொன்றது.
சர்க்கஸில் இருந்து மீட்டு பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம் ஒன்று, சில நாட்களுக்கு முன்பு இறந்தது. தொடர்ந்து விலங்குகள் இறந்ததால் பூங்கா அதிகாரிகளைப் பற்றி முதல்வருக்கு பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னறிவிப்பின்றி முதல்வர் திடீரென ஆய்வு நடத்தியது பூங்கா அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், தமிழ்நாடு விலங்கியல் ஆணையத்தின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.