தமிழகம்

ஜெ. படத்தை அகற்றக்கோரும் மனு: மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு அலுவல கங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரி தாக்க லான மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த மனுக்கு பதிலளிக்க ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மதுரையைச் சேர்ந்த வழக் கறிஞர் கருணாநிதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தாக்கல் செய்த மனு விவரம்:

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அவர் முதல்வர் பதவி, எம்எல்ஏ பதவியை இழந்தார். அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஜெயலலி தாவின் படத்தை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர்.

அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அப்புறப்படுத்தக்கோரி தலைமைச் செயலர், பொதுத் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். எனவே, அரசு அலுவலகங்கள், அரசின் திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் மற்றும் அவரது படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் வாதிட்டனர். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அமைச்சரவை செயலர், தமிழக தலைமைச் செயலர், பொதுத்துறை செயலர், பொது தகவல்துறை செயலர், தமிழ்நாடு அரசு கேபிள் கழக தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுவில் 7-வது எதிர்மனுதாரராக ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

SCROLL FOR NEXT