கோவை மாவட்டம் வரப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு தக்க நடவடிக்கைகளை பரிந்துரைப்போம் என்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் சின்னத்தடாகத்தை அடுத்த வரப்பாளையத்தில், கடந்த பிப்.28-ம் தேதி இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாதி மோதலாக உருவெடுத்த இப்பிரச்சினையில், தாழ்த்தப்பட்ட மக்களில் 2 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வரப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் இனியன், லிஸ்டர் செல்வராஜ் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
இக்குழு, தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து பிரச்சினைக்கான காரணம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், தீண்டாமை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தது. சாதிய பாகுபாடு நிலவுவதால், பொதுக் கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி மறுக்கப்படுவதாகவும், பள்ளிக் குழந்தைகளிடம் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், 7 ஆண்டுகளாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் விநியோகிக்க மறுப்பதாகவும் புகார் கூறினர்.
மேலும் கழிப்பிடம், குடிநீர், சாலை, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், தங்கள் பகுதியில் போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்தி தரவும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சாதிய மோதலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தோம். அவர்கள் மீது சாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்க உள்ளோம். அதேபோல் விசாரணை அறிக்கையையும், பரிந்துரைகளையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சமர்ப்பிப்போம். அதன்பிறகு, அந்த பரிந்துரைகள் மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டு செயல்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன்கள் பெற்றுக் கொடுக்கப்படும். ஓரிரு சம்பவங் களில் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அதனுடன் ஒப்பிட்டு, அனைத்து வழக்குகளையும் கூற முடியாது. பல இடங்களில் சாதி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன” என்றனர்.
ஆதிதிராவிடர் நல அலுவலரும், துணை ஆட்சியருமான மோகன், சிறப்பு வட்டாட்சியர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.