தமிழகம்

இந்தியாவுக்கான பெருமை கேமரூனுக்கு கிடைத்தது: கருணாநிதி

செய்திப்பிரிவு

“இலங்கைத் தமிழர் விவகாரத்தில், இந்திய பிரதமருக்கு கிடைக்க வேண்டிய பெருமையும், புகழும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கிடைத்துள்ளது” என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

காமன்வெல்த் மாநாட்டின் சிறப்பு, இலங்கை அதிபருக்கு கிடைத்த நெருக்கடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கிடைத்த சர்வதேச கவனம். இலங்கையில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் வாழும் தமிழர்கள் என அனைத்து தமிழர்களின் நெஞ்சிலும் கேமரூன் இடம் பெற்று விட்டார்.

இந்தப் புகழும், பெருமையும், இந்தியப் பிரதமருக்கும் கிடைத்திருக்கும். இந்தியாவிலிருந்து ஒரு துரும்பு கூட காமன்வெல்த் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளாது என்று அறிவித்திருந்தால், தமிழகம் மகிழ்ந்திருக்கும்; தமிழர்கள் பாராட்டியிருப்பர்; பிரதமரும் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பார்.

மத்திய அமைச்சரை அனுப்ப முன்வந்த சூழலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்கொடுமையைக் கண்டிக்கும் வகையில், இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் கூறியிருக்கலாம்.

இலங்கை சென்ற வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று தமிழர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம்.

ராணுவம் செய்துவரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வண்ணம் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தவறினால், ஐ.நா.மன்ற மனித உரிமை ஆணையத்தில், இந்தியா தீர்மானம் கொண்டு வரும் என்று இலங்கை அதிபரிடம் சொல்லியிருந்தால், கேமரூனுக்கு கிடைத்த அத்தனை பெருமையும் இந்திய அரசுக்கு கிடைத்திருக்கும்.

இங்கிலாந்து பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம் பார்த்து ஆறுதல் வழங்கினாரே; அதைப் போல சல்மான் குர்ஷித் செய்தாரா? அவருக்கென்ன, மாண்டு மடிந்தது நமது தமிழ் இன மக்கள்தானே?

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT