தமிழகம்

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்: மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கவும், உண்மையான கூட்டாட்சியை நிலைபெறச் செய்யவும் அரசியல் சாசனத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் வைகோ, சனிக்கிழமை வெளியிட்டார். அதில் 46 தலைப்புகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

மாநிலங்களுக்கு அதிகாரம்

நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, உண்மையான கூட்டாட்சியை நிலைபெறச் செய்யவும் அம்பேத்கரே குறிப்பிட்டதுபோல இந்திய அரசியல் சாசனத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்த நாடு, இந்திய ஒன்றியம் என்று அழைக்கப்படுவதற்கு பதில், இந்திய ஐக்கிய நாடுகள் என்று அழைக்கப்பட வேண்டும். அதை நிறைவேற்ற மதிமுக முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.

பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு பெறும் வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தகுதி வாய்ந்தவரை இயக்குநராக அமர்த்த வேண்டும்.

பொது வாக்கெடுப்பு

தமிழீழம் என்ற நோக்கத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா. சபைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சட்டங்களை மாற்றி, இட ஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்படும். சிறுபான்மை நலன் பாதுகாக்கப்படும்.

நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஒழுங்குமுறைக் குழு அமைத்தல் போன்றவற்றை வலியுறுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு சட்டமாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

புலிகளுக்கு தடை நீக்கம்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை நீக்க வேண்டும். தூக்கு தண்டனையை அடியோடு ரத்து செய்ய வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினை தீரவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீனவர் நலன் கருதி, மாற்று வழித்தடத்தில் சேது கால்வாய்த் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை, கூடங்குளம் அணு உலையை மூட நடவடிக்கை, மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம் மறு ஆய்வு, இணைய வர்த்தகத்துக்குத் தடை, தமிழக ஆறுகளில் மணல் அள்ளத் தடை கொண்டு வருதல், ஜெயங்கொண்டம் மின் திட்டம் கொண்டு வருதல், மரபு சாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தல் போன்றவை வலியுறுத்தப்படும்.

திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைத்தல், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு, சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை, நீதிபதிகள் தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை, நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி ஆக்குதல், தேசிய நீர் கொள்கை ரத்து, சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அலுவலகம், கறுப்புப் பணம் மீட்பு, புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT