திருச்சி மாநகரில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜங்ஷன்-மன்னார்புரம் மேம்பாலப் பணி காரணமாக, சிறப்புக் காவல் படையணி மைதானத்தையொட்டி மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, அவ்வழியே வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஐங்ஷன் ரவுண்டானா, கிராப்பட்டி, மன்னார்புரம் செல்லும் சாலைகளில் வாகனங்கள் நீண்டவரிசையாக அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் இருந்து வந்த அரசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், குட்ஷெட் மேம்பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டன. இதன் காரணமாக குட்ஷெட் மேம்பாலத்திலும், தலைமை அஞ்சல் நிலைய சிக்னல் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல, மாநகரின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி, பால்பண்ணை, நெ-1 டோல்கேட் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “முகூர்த்த நாள் என்பதால், வாகனங்களின் இயக்கம் அதிக அளவில் இருந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜங்ஷன் அருகே மேம்பாலப் பணிகள் நடைபெறும் சாலையில், சில இடங்களில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லவேண்டிய சூழல் நிலவுவதால், அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. எனினும், போக்குவரத்து போலீஸார் சூழலுக்கேற்ப செயல்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்” என்றனர்.