தமிழகம்

ஒகேனக்கல் வனத்தில் ஆண் யானை பலி

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் நோய் பாதிப்புடன் சுற்றித் திரிந்த ஆண் யானை உயிரிழந்தது.

ஒகேனக்கல் அருகேயுள்ள முண்டச்சிப்பள்ளம் பகுதியில் சின்னாற்றை ஒட்டி யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்தக் கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகி தள்ளாடி நடந்தபடி சுற்றி வந்தது. கடந்த 2 வாரங்களுக்கும் மேல் இதே நிலையில் சுற்றி வந்த அந்த யானை நேற்று உயிரிழந்தது. தகவல் அறிந்த தருமபுரி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகளும், கால்நடை மருத்துவர் குழுவும் யானை இறந்து கிடந்த வனப்பகுதிக்குச் சென்றனர். அதே பகுதியில் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து முடித்து அடக்கம் செய்தனர். யானையின் உடலில் இருந்த 2 தந்தங்கள் சேகரிக்கப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் யானை, உடல் நிலை பாதிப்புக்கு ஆளாகி இருந்த நிலையில் வனத்துறை யினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தும், கண் காணித்தும் வந்தனர். ஆனால், தற்போது நிலவும் கோடை வறட்சியின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் யானை யின் உடல்நிலை மேலும் மோசம டைந்து வந்தது. இந்நிலையில் அந்த யானை உயிரிழந்து கிடந்தது நேற்று காலை தெரிய வந்தது. கடந்த 3 மாதத்திற்குள் ஒகேனக்கல் வனப் பகுதியில் மட்டும் 4 யானைகள் உயிரிழந் துள்ளது. இது வன விலங்கு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு பணியின்போது வெளியேற்றப்படும் கழிவு நீர், ஒகேனக்கல் அடுத்த முண்டச்சிப்பள்ளம் பகுதியில் வனத்தில் உள்ள சிறு சிறு குட்டை மற்றும் தடுப்பணை பகுதிகளில் சேரும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது. தற் போதைய கோடை வறட்சியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த நீரைத் தான் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தன. இந்நிலையில், தேவையற்ற கனிமங்கள், தாதுக்களுடன் கூடிய கழிவு நீராக வெளியேறும் இந்த தண்ணீர் வன விலங்குகள் பருக தகுதியற்ற தண்ணீராக இருக்கலாம். அதன் காரணமாக யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம் என்ற சந்தேகம் வனத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, சுத்திகரிப்பின்போது வெளியாகும் கழிவு நீரை இனி குட்டைகள், தடுப்பணைகளில் தேங்கும் வகையில் வெளி யேற்றப்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரி கிறது. இதுதவிர, ஏற்கெனவே தேங்கி நிற்கும் தண்ணீரையும் உடனடியாக மோட்டார்கள் மூலம் வெளியேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT