வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மாலத்தீவு அருகே நிலவி வரும் காற்றவுத்தம் வலுவிழந்துவிட்டது. மேலும் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், அடுத்த 48 மணி நேரத்தில் (செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து) அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவைகளால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்'' என்று அவர் கூறினார்.