தமிழகம்

தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டம்: மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி

செய்திப்பிரிவு

“தமிழகத்தில், 13 முதல் 15 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில், உதயகுமார் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி கூறினார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆம் ஆத்மி சார்பில் வரும் 22-ம் தேதி முதல் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊழலைத் தூக்கி எறியும் வகையில், ஆம் ஆத்மி சார்பில் துடைப்பம் ஏந்திய பயணம் நடைபெற இருக்கிறது. ஜனவரி 26 வரை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியில் 2,80,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இப்போது இந்த எண்ணிக்கை 3,50,000 தாண்டியிருக்கும்.

கன்னியாகுமரி தொகுதியில், உதயகுமார் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடத்திலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வர வில்லை. உதயகுமாரும் அவரது ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

15 தொகுதிகள்

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி 13 முதல் 15 தொகுதிகள் வரை போட்டியிடும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஆம் ஆத்மியை புரிந்துகொண்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் செய்த அமைச்சர்கள், எம்.பி.க்களை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த இருக்கிறோம். ஊழல்வாதிகள் மீண்டும் நாடாளுமன்றம் செல்லக் கூடாது.

அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் ஆகும் முன், நாங்கள் தேடிப் போய் உறுப்பினர்களைச் சேர்த்தோம். இப்போது எங்களைத் தேடி வந்து உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்போம் என்றார்.

“ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது அணியுடன் கைகோர்க்கும் வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டபோது, “கூட்டணி சிந்தனையே இல்லை. இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சிக்கும் வெளிப்படையான தன்மை இல்லை” என்றார் அவர்.

SCROLL FOR NEXT