இந்த ஆண்டில் ரூ.11 கோடியே 97 லட்சத்தில் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணி கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா கூறியதாவது:
சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு கால்களும் வலுவிழந்து, கைகள் நல்லமுறையில் செயல்படும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், அதன்பிறகு பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2011முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 4,824 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 2017-18ம் நிதியாண்டில் ரூ.11 கோடியே 97 லட்சத்தில் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 447 பேருக்கும் ஸ்கூட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.